சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், அப்போது மதுபோதையில் இருந்துள்ளார் என காவல்துறை தரப்பில் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனரிடம் ஆளுநர் மாளிகை துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகார்.. புதன்கிழமை (அக்.25) அன்று மதியம் 2.45 மணி அளவில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விழிப்புடன் செயல்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த தாக்குதலை மேற்கொண்டவர் காவலர்கள் வசம் சிக்கினார். கடந்த சில மாதங்களாக ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. பெரும்பாலும் இதில் ஈடுபட்டது திராவிட முன்னேற்ற கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தான். இவர்கள் தான் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆளுநருக்கு எதிராக வாய்மொழி தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022-ல் தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. இப்படியாக ஆளுநர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆளுநரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தொடர்பான புகார்கள் மீது போலீசார் அலட்சியம் காட்டியது. அது ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை குலைத்தது. அதன் விளைவுதான் தற்போது ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்டுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல். வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் ஆளுநர் பணியாற்ற முடியாது. அதனால் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.