செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டதாக முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்த சில மணிநேரங்களில் அந்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். கவர்னரின் இந்த செயலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பழனி நகர் முழுவதும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், “எங்கள் அமைச்சரை நீக்க ராஜ்பவன் ஆர்.என்.ரவி யார்? டெல்லிக்கு செல். இவர்களை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்கச் சொல் என குறிப்பிட்டு, உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நிசித் பிரமானிக் (11 வழக்குகள்), சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பார்லா (9 வழக்குகள்), வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் (7 வழக்குகள்), ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் (6 வழக்குகள்), நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி (5 வழக்குகள்), சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகேல் (5 வழக்குகள்), உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே (3 வழக்குகள்), உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா (1 வழக்கு)” என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன..
