கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து பாஸ் செய்த 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தார். அந்த மாணவிக்கு 4 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் மலர் செல்வன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் விசாரணையில், புடையூர் காலனியை சேர்ந்த வேதியியல் ஆசிரியர் மலர்செல்வன்(50) தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பதும் தெரிந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியர் மலர்செல்வனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு திருமணமாகி, மனைவி, இரு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளது.