மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இயேசு பிரான் உயிர்த்தியாகம் செய்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.
தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் அவர் நோன்பு இருந்த காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். தவக்காலத்தின் கடைசி வெள்ளியன்று இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். அந்த நாள் மனுக்குலத்தின் பாவங்கள் நீங்கியதாக விவிலியம் கூறுகிறது. அந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் இன்று அனுசரிக்கிறார்கள்.
இதையொட்டி இன்று அனைத்து தேவாலயங்களிலும் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வசனங்களை தியானித்து திருப்பலி நடத்துகிறார்கள். அதன்படி இன்று வேளாங்கண்ணி, பூண்டி, திருச்சி லுர்தன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் இந்த சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கினார், ஆனால் சேவை மற்றும் இரக்கத்தின் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. கர்த்தராகிய கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களை ஊக்கப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.