Skip to content

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த மார்ச் 13-ம் தேதி 64,960, மார்ச் 31-ம் தேதி ரூ.67,600, ஏப்ரல் 1-ம் தேதி ரூ.68,080 என உச்சத்தை தொட்டது.

ஆனால், சென்னையில் ஆபரண தங்கம்  நேற்றும்   புதிய உச்சத்தை பதிவு செய்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.8,815-க்கும், ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இப்போது  தங்கம் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது . சென்னையில் இன்று (ஏப்.17) 22 காரட்  ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கும், ஒரு பவுன் விலை ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும் விற்கப்படுகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 உயர்ந்து ரூ.9,731 ஆகவும், பவுன் விலை ரூ.912 உயர்ந்து ரூ.77,848 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.10 லட்சம் ஆகவும் இருக்கிறது.

தங்கம் விலை உயர்வு குறித்து நகை வியாபாரிகள்  கூறியதாவது: , “அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்துள்ளதால், பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை உயர்கிறது. வரும் நாட்களிலும் இது நீடிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

உலகின் பெரும் பணக்கார நாடான  அமெரிக்காவும்,  பெரும் பொருளாதார நாடான சீனாவும் ஏட்டிக்கு போட்டியாக    மாறி மாறி வரி விதிப்பில்  அதிரடி காட்டி வருவதால்  மக்கள்  கவனம் இப்போது தங்கத்தின் மீது  திரும்பி உள்ளது. இதே நிலையில் அமெரிக்காவும், சீனாவும் வரிகளை உயர்த்தினால் இந்த ஆண்டிலேயே  ஒரு பவுன் தங்கம்  ரூ.1 லட்சத்தை  எட்டிப்பிடித்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் தங்கம் இனி  பெயர்களில் மட்டும் தான் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

error: Content is protected !!