ஒடிசா மாநிலத்தில் பூரி மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக சம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றிற்கு சம்பித் பத்ரா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறியிருந்தார்.பாஜ வேட்பாளரின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனம் வலுத்தது. சம்பித் பேசும் வீடியோகாட்சிகளை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
சர்ச்சையை தொடர்ந்து சம்பித் பத்ரா தனது எக்ஸ் பதிவில், “பூரியில் பிரதமர் மோடியுடன் பேரணியில் பங்கேற்றேன். அதன்பின்னர் ஏராளமான ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். அனைத்து இடத்திலும் ஸ்ரீஜெகன்நாதரின் தீவிர பக்தர் மோடி என்று கூறினேன். தவறுதலாக ஒரு இடத்தில் மாற்றி கூறிவிட்டேன்.எனது தவறுக்காக நான் ஜெகன்நாதரின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இந்த தவறுக்கான பிராயசித்தமாக அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பேன், “என்று தெரிவித்தார்.
இதனிடையே ஊடகம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “நான் மனித பிறவியே இல்லை. நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல், ஒரு சாதாரண மனிதரிடம் இருந்து பெறப்பட்டது கிடையாது. கடவுளால் மட்டுமே இந்த ஆற்றலை கொடுக்க முடியும்.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்,”எனத் தெரிவித்துள்ளார்.