தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் 36 வது வார்டு திமுகவினர் சார்பாக 12 ம் ஆண்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்தக் கோலப்போட்டியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கு பெற்று பல வண்ணத்தில் கோலமிட்டனர். புள்ளி கோலங்கள், கம்பி கோலங்கள், ரங்கோலி ஆகிய பல வகைக் கோலங்கள் இடம்பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வழங்கினார். இதில் வார்டு பிரதிநிதி விஜய் ஆனந்த், 36 வது வட்டக் கழக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற பெண்கள் வரைந்த ஒவ்வொரு கோலத்திற்கு அருகிலும் பொங்கல் வாழ்த்துக்கள், தமிழர் திருநாள் வாழ்த்துக்களும் திராவிட மாடல் ஆட்சி, தளபதி, தமிழ் வாழ்க என்ற வாசகங்களும் இடம் பெற்றன. மேலும் “கோ பேக் கவர்னர்” என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.
அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று நடைபெற்ற கோலப் போட்டியில் “கோ பேக் கவர்னர்” தமிழ்நாடு வாழ்க என்ற வாசகங்களையும் எழுதி இருந்தனர்.