தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பாலியல் வல்லுணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தந்த வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில், மனிதம் எனப்படும்
மனித உரிமை அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு, இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பாலியல் வன்முறைக்கு எதிராக கருத்தியல் போராட்டம் குறித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, அரியலூர் சிறுமி பாலியல் வல்லுநர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேரில் மூன்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, தற்போது உள்ள சட்டம் போதுமானதாக உள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் அரசு கடைபிடிக்கும் சித்தாந்தமாக உள்ள மனுஸ்ருதி உள்ளது.
இது பெண்கள், ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகள் ஆகியோர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை. எனவே இந்த சித்தாந்தம் ஆளும் கட்சியின் சித்தாந்தமாக, அரசியல் அதிகார அரியணையில் ஏறி இருக்கும் போது, அதன் செல்வாக்கு சமூகத்தில் ஓங்கி வருகிறது. பல தீர்ப்புகளில் நீதிபதிகள் மனுஸ்ருதியை படியுங்கள் என சொல்வதை பார்த்திருக்கிறோம். எனவே இந்த மனுஸ்ருதி சித்தாந்தத்திற்கு எதிராக, கருத்தியல் ரீதியாக போராட வேண்டி உள்ளது. இவ்வகையான சட்டங்களை கொண்டு வருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளவர்கள், பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால், அவர்களது நடத்தை விதிகள் படி குற்றம் என்று கருதப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கூறினார்.