திருச்சி, துப்பாக்கித் தொழிற்சாலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ரமா (51). இவர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால் கரையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டூவீலரில் வந்த இருவர், ரமா கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அதேநாளில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்கண்ணன் மனைவி லதா என்பவர் அதே பகுதியில் வைஷாலி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வைஷாலியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றதாக திருச்சி அம்பிகாபுரம் ரத்தினசாமி தெருவை சேர்ந்த வெற்றிவேல் (24) மற்றும் திருச்சி சங்கிலியாண்டபுரம் கலைஞர் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் டார்வின் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவை தொடர்பான வழக்குகள் திருச்சி தலைமை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனித்தனியாக நடந்து வந்தது. இரு வழக்குகளிலும் தனித்தனியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறையும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஹேமச்சந்திரன் வாதாடினார்.