திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ளது கேர் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி திவ்யா(19), இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு விடுதியில் மாணவிகள் அனைவரும் தூங்கிய பின்னர், திவ்யா வராண்டாவுக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை சக மாணவிகள், திவ்யா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, விடுதி பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ராம்ஜி நகர் போலீசார் வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட திவ்யா, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மிக்கேல்பட்டி இருளர் தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சங்கர்.
மாணவி திவ்யாவுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்று சக மாணவிகளிடம் கூறி வந்தாராம். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.