மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1,500ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல்பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அவையாம்பிகை அம்மன் சிவனை மயிலூரில் பூஜித்த இவ்வாலயத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ 24-வது குருமஹா சன்னிதானம் அருளாணையின் வண்ணம் மாயூரநாதர் நற்பணி மன்றம் சார்பில் மயூரநாதசுவாமி மற்றும் அருள்மிகு அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 24வது ஆண்டாக நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்பட்ட 250லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாரதனை மஹாதீபாராதனை நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.