ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது. சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில், கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகி தற்போது குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ள நிலையில், கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது. தற்போது அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையில் வலது கை அகற்றப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் நலத்தை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். குழந்தை நலமுடன் இருப்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை அளித்த விளக்கத்தில், குறை பிரவசத்தில் பிறந்த குழந்தைக்கு மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.நீர் கசிவை கட்டுப்படுத்த 5 நாட்கள் முன்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது. அமைச்சர் உத்தரவுப்படி விசரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.