என்ன விலை அழகே, …..சொன்ன விலைக்கு வாங்க வருவேன், ……விலை உயிர் என்றாலும் தருவேன் என அழகை போற்றிய தமிழ் பாடல் உண்டு. அதே பாடலில் தினம் தினம் உனை நினைக்கிறேன்…..
துரும்பென உடல் இளைக்கிறேன் என்றும் பாடப்பட்டு இருக்கும். அழகுக்கு பெரும்பாலான இடங்களில் உயர்வு கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் அழகால் இளைஞர்கள் துரும்பென இளைத்து போகிறதையும் பார்க்கிறோம்.
அப்படி ஒரு சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் நடந்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் வெல்வது என்பது ஒவ்வொரு வீரனின் வாழ்நாள் கனவு. அதற்காக அவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆட்சி செய்து பதக்கம் வெல்ல முயற்சிக்கிறார்கள்.
அந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு அழகி, தன் அழகால் வீரர்கள் மனதை பாடாய் படுத்தி அவர்களின் லட்சிய கனவை சிதைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழும்பியதோடு மட்டுமல்ல, அவரை போட்டியில் இருந்து விலக்கி, பாரீசை விட்டு வெளியேற்றியும் விட்டனர். அப்படி ஒருஅழகி யார் என்பதை அறிய எல்லோர் மனதும் படபடக்கத்தான் செய்யும் இதோ அந்த அழகியைபற்றிய விவரம்:
பராகுவே நாட்டைச்சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது அழகால் பல இதயங்களை வென்றார். இந்நிலையில், அவரின் அழகு அவருடைய அணியில் உள்ள வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறப்பட்டு, சொந்த நாட்டிற்கு அந்த வீராங்கனை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது
லுவானா அலோன்சோ, தனது “குறைவான ஆடை மற்றும் பிற விளையாட்டு வீரர்களுடன் பழகுவது” போன்றவற்றால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மற்ற போட்டியாளர்களுக்கு கவனத்தை சிதறடித்துள்ளார்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறிய லுவானா அலோன்சோ என்கிற வீராங்கனை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். அவர் நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், தனது சொந்த நாடு திரும்பிய லுவானா அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 19, 2004 ல் பிறந்த 20 வயதான நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ, பராகுவே நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக் நீச்சல் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்றவர். 100 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டியில் பராகுவேயில் தேசிய சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்.
லுவானா அலோன்சோ தற்போது அமெரிக்க டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பல்கலைக்கழகத்தின் பெண்கள் நீச்சல் மற்றும் டைவிங் குழுவுடன் அவர் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் ஒரு செமஸ்டர் வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
தனது 17 வயதில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது நாட்டை முதன்முதலில் பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் அவர் வெளியுலகிற்கு அறிமுகமானார். அந்தப் போட்டியில், அவர் 28 வது இடத்தைப் பிடித்தார். அதனால், அரையிறுதி வாய்ப்பை தவற விட்டார். தற்போது நடந்து வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அவர் இரண்டாவது முறையாக களமாடிய நிலையில், தகுதி சுற்றில் (ஹீட்ஸ்) அவர் 6-வது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன், யூத் ஒலிம்பிக், தென் அமெரிக்க விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.
ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, 2024 ஒலிம்பிக்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த அலோன்சோ விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஒலிம்பிக்கிற்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவில் அவர் பராகுவேயை விட அமெரிக்காவையே தான் அதிகம் விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது.
அலோன்சோ தனது பராகுவேய அணியினரை ஆதரிப்பதற்குப் பதிலாக டிஸ்னிலேண்டில் தனது நேரத்தைச் செலவிட்டதாக பல உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி டெய்லி மெயிலில் வெளியான செய்தியின் படி, அவர் தனது “குறைவான ஆடை மற்றும் பிற விளையாட்டு வீரர்களுடன் பழகுவது” போன்றவற்றால் ஒலிம்பிக் போட்டிகளில் மற்ற போட்டியாளர்களுக்கு கவனத்தை சிதறடித்துள்ளார்.
“நான் ஒருபோதும் வெளியேற்றப்படவில்லை அல்லது எங்கும் வெளியேற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள். நான் எந்த அறிக்கையையும் வெளியிட விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன். இது எனது கடைசிப் போட்டி. நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று லுவானா அலோன்சோ வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.