இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இன்று 12வது நாளாக போர் நடந்து வருகிறது. காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. மருத்துவமனைக்கு பின்புறத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 500 பேர் உயிரிழந்தனர். போரால் பாதிக்கப்பட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்கள் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் இஸ்ரேலால் நிகழ்த்தப்பட்டதா?, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவால் நிகழ்த்தப்பட்டதா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலாலேயே 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, காசா மருத்துவமனை மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என கூறியுள்ளது. காசாவில் செயல்பட்டுவரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய ராக்கெட்டே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடந்த சமயத்தில் நாங்கள் அந்த பகுதியில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக எங்களிடம் உள்ள பல்வேறு வழிகளில் உளவு தகவல்களை சேகரித்தோம். எங்கள் எதிரி என்ன கூறினர் என்பதையும் கேட்டோம். எங்கள் தாக்குதல் அமைப்பின் தகவல்களையும் சோதித்தோம். அதில், மருத்துவமனைக்கு அருகே இருந்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பால் வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் நோக்கி பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
அந்த ராக்கெட்டுகளில் குறைந்தபட்சம் ஒன்று தவறுதலாக காசா மருத்துவமனை உட்பகுதி மீது விழுந்துள்ளது. அந்த ராக்கெட் வெடித்து சிதறியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் பாதுகாப்புப்படையால் நிகழ்த்தபடவில்லை. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட்டுகளில் ஒன்று தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்து வெடித்ததே இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்’ என்றார்.
இஸ்லாமிக் ஜிகாத் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட்டுகளில் ஒன்று காசா மருத்துவமனை மீது விழுந்தே இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
போரால் வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த பலர் மத்திய மற்றும் தெற்கு காசாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவமனைகள், ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.