கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று தரையில் விழுந்தது.
இந்த விபத்தில் சிலிண்டரில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறியது. உடனடியாக லாரியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேஸ் முழுவதும் வெளியேற்றபட்டாலோ அல்லது கேஸ் முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டாலோ தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கேஸ் நிறுவன பொறியாளர்கள் என பலரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிக்காக கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டு சிலிண்டரை மீட்கும்பணி நடக்கிறது.