சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஒருவாரமாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குறறம்சாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆட்டோக்களுடன் வந்த டிரைவர்கள் மாவட்ட ஆட்சியர் வராத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் போராட்ட இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிஎன்ஜி கேஸ் பயன்படுத்தும் 900-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி கேஸ் பிடிப்பதற்கு மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்திலும், குத்தாலம் அருகே சேத்திராபாலபுரத்திலும் அதானி குழுமத்தின் இரண்டு பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகிறது.
இந்த பங்கில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிஎன்ஜி கேஸ் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஆட்டோக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க மதியம் 2 மணி முதல் கொட்டும் மழையில் காத்திருந்தனர்.
முக்கிய அலுவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி,நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அதிகாரிகள் யாரும் ஆட்டோ ஓட்டுநர்களை எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்காததால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்’ பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா போராட்ட இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிஎன்ஜி கேஸ் தொடர்ந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேஸ் தட்டுப்பாட்டால் ஒரு வாரமாக தொழிலுக்கு செல்லாமல் வாழ்வாவாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கேஸ் பிடிக்க காரைக்கால் மாவட்டத்திற்கு சென்றால் பர்மிட். இல்லாமல் வருவதாக அபராதம் கட்டியதாகவும் ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவித்தனர். பெட்ரோல் கிடைப்பது போன்று தங்கு தடையின்றி சிஎன்ஜி கேஸ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கச்சேரி சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.