Skip to content

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

  • by Authour

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டுஉபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது.  சிலிண்டர் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இது குறிதர்து  அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக் கப்படுகிறது. 30-ந் தேதியில் (இன்று) இருந்து இது அமலுக்கு வரும்.  ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி, இது பெண்களுக்கு மோடி அரசு அளிக்கும் பரிசு. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் அடுத்தடுத்து வாங்கும் சிலிண்டர்களுக்கு ஏற்கனவே ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களைப் போல், அவர்களுக்கும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுகிறது. எனவே, மானியத்துடன் சேர்த்து அவர்களுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறையும்.

டில்லியில் அவர்களுக்கு ஒரு சிலிண்டர் ரூ.703-க்கு விற்கப்படும். கூடுதலாக 75 லட்சம் ‘உஜ்வாலா’ திட்ட கியாஸ் இணைப்புகளை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ‘உஜ்வாலா’ திட்ட பயனாளிகள் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என்று அவர் கூறினார். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

? விலை குறைப்பை தொடர்ந்து, சென்னையில் ரூ.1,118.50 ஆக உள்ள வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில், ரூ.1,103 ஆக உள்ள சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.903-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப விலை சிறிது வேறுபடும்.

இதற்கிடையே, சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ரக்ஷா பந்தன் பண்டிகை, குடும்பத்துக்குள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். என் குடும்பத்தில் உள்ள சகோதரிகளுக்கு கூடுதல் சவுகரியத்தை அளிக்கும். அவர்களது வாழ்க்கை எளிதாகும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கொண்டு வாழட்டும். இதுதான் கடவுளிடம் நான் வைக்கும் கோரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-கடந்த 2 மாதங்களில் ‘இந்தியா’ கூட்டணியின் 2 கூட்டங்கள்தான் நடந்துள்ளன. அதற்குள் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இது, ‘இந்தியா’ கூட்டணியின் விளைவு என்று அவர் கூறியுள்ளார். மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அங்கு வாக்காளர்களை கவருவதற்காக, சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எனவே, அக்கட்சிக்கு பதிலடி கொடுக்கும்வகையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!