வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் நாள்தோறும் ‘கர்பா’ நடனம் ஆடி இந்த பண்டிகை கொண்டாடப்படும். பாரம்பரிய நடனமாக இந்த ‘கர்பா’ நடனம் இரவு முழுவதும் ஆடப்படும். இந்த நடனத்தின் போது பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் இசைக்கு ஏற்ப நடனமாடுவர்.
வடமாநிலத்தின் பல்வேறு பகுதியில் இந்த நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் பல ஆண்டுகளாக இந்த நடனம் புகழ் பெற்று விளங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குஜராத்தில் நவராத்திரி நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், கேடா மாவட்டத்தில் உள்ள கபத்வஞ்ச் நகரில் ‘கர்பா’ நடனமாடிய 17 வயதான வீர் ஷாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மூக்கில் ரத்தம் கொட்டியது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வேறொரு நிகழ்வில் கொண்டாடிக்கொண்டிருந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது மற்றும் மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வீர் ஷா தந்தை ரிபால் ஷா கைகளை கூப்பியபடி, “தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் கர்பா விளையாடாதீர்கள். இன்று என் மகனை இழந்துவிட்டேன், வேறு யாருக்கும் இது நடக்காது என்று நம்புகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோன்று குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ‘கர்பா’ நடனமாடிய 10-க்கும் அதிகமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்கள் பலர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடியபோது 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ‘கர்பா’ நடனங்கள் நடைபெறும் இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவையான மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாரடைப்புக்கு ‘கர்பா’ விளையாடியதற்கும் தொடர்புள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.