தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை அகற்றுதல், நோய்ப்பரவல், அறிகுறிகள் மருத்துவ முறைகள் குறித்து அறிவியல்பூர்வமான உண்மைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல், புதிய நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தொழுநோயாளிகளை சமூகத்தில் சக மனிதர்களாய் வாழச் செய்தல் போன்ற நோக்கத்துடன் நடத்தப்படும் இம்முகாம்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஒட்டி தஞ்சையில் நடந்த முகாம் தொடக்க விழாவிற்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் தலைமை வகித்தார், துணை இயக்குனர் (தொழுநோய்) குணசீலன் விளக்கவுரையாற்றினார். துணை இயக்குனர் (காசநோய்) மாதவி வாழ்த்துரை வழங்கினார். முகாமில் தொழு நோயாளிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.