தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கணா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் இந்திரா காந்தி வேடத்தில் கங்ணா ரணாவத் நடிக்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து கங்கணா ரணாவத் கூறும்போது, “நான் சொந்தமாக ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பொருளாதார பிரச்சினையால் அது நிறைவேறாமல் போனது. தற்போது நான் வசிக்கும் வீடு உள்பட விலைமதிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறேன்.
ஆரம்ப காலத்தில் நான் கையில் வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தேன். ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த மொத்தத்தையும் இழக்க வேண்டி வந்தால் மும்பை வந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைக்கு சென்று விடுவேன். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்க மாட்டேன். சொந்த காலில்தான் நிற்பேன்” என்றார்.