ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவலத்தை முன்னிட்டு மாலை 3 மணிக்கு கணக்கவிநாயகருக்கு அபிஷேகமும், 4.30 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றிய பக்தர்கள், கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குருக்கள் தெரு, கணக்கவிநாயகர் கோயில் வழியாக கிரிவலம் சென்று, மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் பிரகாரத்தை கிரிவலம் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. சித்திரை பவுர்ணமி கிரிவலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.