மலையாள சினிமா படப்பிடிப்பின் போது தன்னை தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக பிரபல தமிழ் நடிகை சார்மிளா கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை சார்மிளா கூறியதாவது:
கடந்த 1997ல் ‘அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’ என்ற ஒரு மலையாளப் படத்தில் நான் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். இந்த படப்பிடிப்பில் இருந்தபோது நான் கேரளாவில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்தேன். என்னுடன் ஒரு பெண் உதவியாளரும், ஒரு ஆண் உதவியாளரும் இருந்தனர். அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான எம்.பி. மோகனன், தயாரிப்பு மேனேஜர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் என்னுடைய அறைக்குள் திடீரென புகுந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த நான் நொடிப்பொழுதில் அந்த அறையிலிருந்து தப்பிச்சென்று ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் கூறினேன்.
ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர் தான் என்னை காப்பாற்றினார். எனது பெண் உதவியாளர் உட்பட சில நடிகைகள் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். இதேபோல் பிரபல டைரக்டரான ஹரிஹரன் என்பவர் ‘பரிணயம்’ என்ற படத்தில் என்னை நடிக்க அழைத்தார்.
அப்போது என்னை அவர் படுக்கைக்கு அழைத்தார். ஆனால் என்னிடம் அவர் நேரடியாக கேட்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரான நடிகர் விஷ்ணுவிடம் இது குறித்து அவர் கேட்டுள்ளார். அந்த விவரத்தை விஷ்ணு என்னிடம் கூறியபோது நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இதனால் அந்தப் படத்தில் இருந்து டைரக்டர் ஹரிஹரன் என்னை நீக்கிவிட்டார். விஷ்ணுவையும் அந்தப் படத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார். வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு ஒரு மகன் இருப்பதால் தற்போது போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என 28 பேர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.