நாகூர் காதிர் ஒலி, தென்கிழக்கு ஆசியாவின் ஞானதீபம் என அழைக்கப்படும் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை 10ம் தேதி அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து வரும் 14ம் தேதி அதிகாலை போர்வை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16ம் தேதி காலை முதல் சந்தனகட்டை அரைக்கும் நிகழ்ச்சியும், 21ம் தேதி இரவு வாணவேடிக்கை
நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22ம் தேதி இரவு கடற்கரையில் பீர் வைக்கும் நிகழ்ச்சியும், 23ம் தேதி காலை சந்தனம் பிழிதல் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து இரவு தஞ்சாவூர் அரண்மனை போர்வை போற்றுதல் மற்றும் தங்கப்போர்வை போற்றுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இருந்து சந்தனகூடு புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனகூடு சென்று வரும் 24ம் தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு வரும் 14ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது. தர்காவில் அலங்காரவாசல் தொடங்கி அனைத்து இடங்களிலும் சாரம் கட்டி வர்ணம் பூசும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு விழா குழு சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது