திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறது.
காந்தி மார்க்கெட்டை ஒட்டி மீன் மார்க்கெட், கறிக்கடை மார்க்கெட் உள்ளது .இந்த பழைய மார்க்கெட் அகற்றப்பட்டு ரூ 13 கோடியில் 148 கடைகள் மீன் மார்க்கெட்டிற்காக கட்டப்பட்டது. இதில் கீழ் தளத்தில் 74 கடைகளும், மேல் தளத்தில் 74 கடைகளும் கட்டப்பட்டன. இந்த கடைகள் பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கையும் வியாபாரிகள் வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் பழைய வியாபாரிகளுக்கு வழங்கப்படாது. நீங்கள் அனைவரும் டெண்டரில் கலந்து கொண்டு கடைகளை ஏலம் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த மீன் மார்க்கெட்டுகான டெண்டர் நாளை நடக்கிறது. இதை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் மீன் கடை ,கறிக்கடை வியாபாரிகள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமையில் இன்று மார்க்கெட்டில் ஒன்று திரண்டனர். அவர்கள் எங்களுக்கு கடைகள ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.