திருச்சி,தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தான் காய், கனிகள் சப்ளை செய்யப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் இந்த மார்க்கெட் விறுவிறுப்புடன் இயங்கத் தொடங்கும். வெளிஇடங்களில் இருந்து காய்கனிகள் வரத்து, மற்றும் வெளியூர்களுக்கு இங்கிருந்து அனுப்பி வைத்தல் என எப்போதும் மார்க்கெட் இயங்கி கொண்டே இருக்கும்.
இன்று ஆயுதபூஜை என்பதால் பூஜைக்கு தேவையான பொரி, கடலை, பூ, தேங்காய், அனைத்து வகை பழங்கள், வாழைகள் என என காந்தி மார்க்கெட் நேற்று முதல் களைகட்டத் தொடங்கியது. இன்று அதிகாலை முதல் வியாபாரம் சூடுபிடித்தது. வியாபாரிகள், பொதுமக்கள்
இன்று அதிகாலையிலேயே மார்க்கெட்டுக்கு வந்து பூஜை பொருட்களை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
தேங்காய், பூ, பழங்கள் விலை இன்று அதிகமாக இருந்தபோதும் வியாபாரம் விறுவிறுப்பாகவே நடந்தது. காந்தி மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாதபடி மக்கள் கூட்டம் அலைமோதியது. தரைக்கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் மார்க்கெட்டுக்கு வந்ததால் காந்தி மார்க்கெட் பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.