இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக நிலவுகிறது. சாமானிய மக்களின் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றை பறிப்பதோடு, உச்சமாய் உயிர்களையும் உருவி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் தன் பங்குக்கு தனியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 2 மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட உத்தரவின் மூலம், சூதாட்ட விளம்பரங்களை வெளியிட தடை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் விதிக்கப்பட்டது. மேலும் பண்பலை வானொலிகள் உட்பட அனைத்து ’ஓடிடி’களுக்கும் இந்த உத்தரவு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் நேரடி விளம்பரம் அல்லாது பதிலி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது மது பான விற்பனை நிறுவனம் தனது சோடாவை விற்பதாக மதுபானத்தின் பெயரை நினைவூட்டும், குட்கா விற்பனை கம்பெனி வாசனை பாக்கு விற்பதாக குட்காவை நினைவூட்டும். அதே போல தற்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு பதிலி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசின் தடை உத்தரவை பொருட்படுத்தாத இந்த பதிலி விளம்பரங்களுக்கு எதிரான மற்றுமொரு நடவடிக்கையாக, கூகுள் நிறுவனத்துக்கு புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் தந்துள்ளது.மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன.