சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில் இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டு முகப்பில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ஸ்தபதி ராதாகிருஷ்ணன் அமைத்து உள்ளார். இந்த சிலையை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண் முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.