டில்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் இந்திய பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை நம்பகத்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றுவதற்கு இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த முறை சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் என்ற மந்திரம் நமக்கு ஜோதியாக இருக்க முடியும்.வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பிளவு, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தூரம், உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம் , இணைய பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி அல்லது நீர் பாதுகாப்பு, எதிர்கால சந்ததியினருக்காக நாம் இதற்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார்.
ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி இருக்கை போடப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி முறைப்படி வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இன்று இணைந்துள்ளது. இதன் காரணமாக ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.