Skip to content
Home » கவர்னர் உத்தரவுக்கு எதிராக … யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு அதிரடி..

கவர்னர் உத்தரவுக்கு எதிராக … யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு அதிரடி..

கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதியதுணைவேந்தருக்கான தேடல் குழுக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியமிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல்கலை.துணைவேந்தர் தேடல் குழு தொடர்பாக யுஜிசி புதிய பரிந்துரைகளை வெளியிட்டது. அதில், ‘தேடல் குழுவில் 3 முதல் 5 பேர் வரை இடம் பெறலாம். அவற்றில் ஒருவர் யுஜிசி தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் ’ என்று கூறப்பட்டது. இதையடுத்து துணைவேந்தர் தேடல் குழுவில், யுஜிசி பிரதிநிதியை நியமனம் செய்வதற்கான திருத்தங்களை மேற்கொள்ள ஆளுநர் தரப்பில் இருந்து உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உயர்கல்வித் துறை ஒப்புதல் அளிக்காததால் தேடல் குழு தங்கள் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் துணைவேந்தர் பதவிகள் காலியாக கோவை பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கான தேடல் குழுக்களில் யுஜிசிசார்பிலான ஒரு உறுப்பினரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். மறுபுறம் ஆளுநரின் தன்னிச்சையான இந்த உத்தரவு மரபுமீறிய செயலாகும். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தற்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழுவின் விவரங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, உறுப்பினர்களாக பல்கலை. சிண்டிகேட் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுசார்ந்து ஆளுநர் கடந்த வாரம் வெளியிட்ட தேடல் குழு அறிவிப்பில் 4-வது உறுப்பினராக இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *