புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தச்சன் குறிச்சியை சேர்ந்தவர் பிரபு (33). இவரது அக்கா மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் தனது தாய்மாமன் பிரபு வீட்டிற்கு சர்மிளா தீபாவளிக்காக வந்துள்ளார். பிரபுவின் மாமியார் வீடு தஞ்சை அருகே வல்லம் நாட்டாணியில் உள்ளது. இந்நிலையில் பிரபு தனது நண்பர்கள் தச்சன்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பசாமி (30), தீனா (33) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை மது அருந்தி உள்ளார். பின்னர் பிரபு தனது மாமியார் வீட்டில் நடந்த கறி விருந்து நிகழ்ச்சிக்காக ஒரே பைக்கில் கருப்பசாமி, தீனா ஆகியோருடன் வல்லம் நாட்டாணி வந்தார்.
தொடர்ந்து தச்சன்குறிச்சியில் உள்ள பிரபு தனது வீட்டில் அக்கா மகள் சர்மிளா மட்டும் தனியாக இருப்பதால் அவரை அழைத்து வரும்படி கருப்பசாமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாட்டாணியிலிருந்து கருப்பசாமி தச்சன்குறிச்சிக்கு பைக்கில் புறப்பட்டு சென்றார். வெகுநேரமாகியும் கருப்பசாமியும், சர்மிளாவும் வராததால் பிரபு இருவரது செல்போனுக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் செல்போன் சுவிட்ஸ் ஆப் என்று வந்துள்ளது.
இதற்கிடையில் வல்லம் அருகே சென்னம்பட்டி முதலை முத்துவாரி காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணை பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
இதற்கிடையில் இந்த தகவல் பிரபு குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. உடன் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் இறந்து கிடந்தது சர்மிளா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரித்தபோது கருப்பசாமியிடம் சர்மிளாவை அழைத்து வர பிரபு கூறியது தெரிய வந்தது. பின்னர் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த கருப்பசாமியை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் சர்மிளாவை அழைத்து வரும் போது இரண்டு பேர் வழிமறித்து தாக்கி விட்டு கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய தகவல்கள் முன்னு பின் முரணாக இருந்ததால் போலீசாருக்கு கருப்பசாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குடிபோதையில் சர்மிளாவை வலுக்கட்டாயமாக கற்பழித்தது தான்தான் என்று கருப்பசாமி ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து பிரபுவிடம் கூறுவேன் என்று சொன்னதால் சர்மிளாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கருப்பசாமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வல்லம் போலீசார் கருப்பசாமியை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.