ஏர் இந்தியா விமானி ஒருவர் தன்னுடைய தோழியை விமான ஓட்டிகள் அமரும் அறையில் (Cockpit) உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. பணியில் அல்லாத, அங்கீகரிக்கப்படாதவர்கள் அந்த அறைக்குள் செல்வது விதி மீறலாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 27 அன்று துபாயில் இருந்து டில்லிக்குச் சென்ற விமானத்தில், பைலட் தன்னுடைய தோழியை, விமான ஓட்டிகளின் இடத்தில் உட்கார வைத்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஒருவர் இது குறித்து விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு (DGCA) புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தை விமான போக்குவரத்து இயக்குநகரம் விசாரணை செய்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், கேபின் குழுவினருக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் விமானத்தில் இருந்த முழு குழுவினரும் விசாரணை முடியும் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட விமானி தன்னுடைய தரப்பு விளக்கத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.