அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு அனுமதி அளித்தது. விசாரணை முடிந்து, சனிக்கிழமை மதியம் 2.46 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். இந்த வழக்கை தன் சேம்பரில் வைத்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். பின்னர் வருகிற 25-ந்தேதி வரை செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக தாக்கல் செய்தனர். பின்னர், செந்தில்பாலாஜியை அதிகாரிகள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தர வேண்டும் என முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை, கைது மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த தகவலை அமலாக்கத்துறை தரப்புக்கு தெரிவிக்க செந்தில்பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி அறிவுறுத்தியுள்ளார்.