திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதா(42) என்ற பெண்மணி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
எனது வாக்காளர் அடையாள அட்டையில் 03.05.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளது. இதனால் தனது வயது நூரைத் தாண்டி காட்டுகிறது. ஆதார் அட்டையில் 1900 என்பதை 1982 என மாற்ற கோரி நான்கு ஆண்டுகள் அலைகிறேன், இதனால் பல இன்னல்களை தொடர்ந்து நான் சந்தித்து வருகிறேன். குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஏனென்றால் நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகள் படிப்பிற்காகவும் மற்ற தேவைக்காகவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் அல்லது மகளிர் சுய உதவிக் குழு லோன் எடுக்க வேண்டும் என்றாலும் யாரும் எங்களுக்கு கடனுதவி தர மறுக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த நான்கு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனவே இந்த மனுவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இது தொடர்பாக கவிதா கூறும்போது, எனது பிறந்த வருடம் 1900 என்று அரசு கூறினால், எனக்கு சுதந்திர போராட்ட தியாகிக்கான பென்சன் வழங்குங்கள் என்றார்.