சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 வது மாநிலச் செயலாளர் பதவி வகித்தவருமான என். சங்கரய்யா, இன்று தனது 102வது வயதில் இயற்கை எய்தினார். காய்ச்சல், சளி, இருமல் போன்ற காரணங்களாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். எளிமையான வாழக்கை வாழ்ந்த சங்கரய்யா, தனக்கு அரசு அளித்த ரூ.10 லட்சம் ரொக்க பரிசையும் அரசுக்கே நன்கொடையாக வழங்கியவர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நரசிம்மலு- ராமானுஜம் தம்பதியரின் 2வது மகனாக 15.7.1921ல் பிறந்தார். இவரது மனைவி நவமணி, 1947 செப்டம்பர் 18 அன்று ஆசிரியை நவமணி அம்மையாரை சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். மதுரை கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணத்துக்கு பி.ராமமூத்தி தலைமை வகித்தார். சந்திர சேகர், சித்ரா, நரசிம்மன் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.
சங்கரய்யாவின் தந்தை நரசிம்மலு தூத்துக்குடி ஹார்வி மில்லில் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் அவரது குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் கடைசிவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்.
இவர் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.
இளங்கலை வரலாறு படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ம் ஆண்டில் சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1938 ம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜாஜி கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் கருப்புக்கொடி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. மதுரையில் தோழர் சங்கரய்யாவும் அவருடைய அண்ணன் ராஜமாணிக்கமும் பங்கேற்று ராஜாஜிக்கு கருப்புக்கொடி காண்பித்தனர்.
ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சங்கரய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது. இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சிறையில் ஏ,பி பிரிவு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.
பத்து நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்த சூழலில் ‘தாய்’ நாவலை படித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சிறைச்சாலை ஐ.ஜி. லெப்டினன்ட் கர்னல் காண்ட்ராக்டர் “பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பின்பும் எப்படி படிக்க முடிகிறது” என்று கேட்டார். அதற்கு சங்கரய்யா “நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி மாணவன்” என்று பதிலளித்தார்.
சிறைவாசம் என்பது ஒரு அரசியல் பள்ளியாக மாறியது. ஏராளமான அரசியல் வகுப்புகள் நடைபெற்றன. ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசும் ஆற்றல் படைத்தவராக திகழ்ந்தார்.
சங்கரய்யா யார் என கேட்டு தலைமை வார்டர் வந்தார். நான் தான் என்றபோது உங்களைத் தவிர அனைவருக்கும் விடுதலை என அறிவித்தார்.
தனிமைச் சிறையில் இருந்த அவரை வேலூர் சிறைக்கு மீண்டும் மாற்ற காமராஜர் கடிதம் எழுதி அனுப்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் சிறையில் இருந்தவர்.
1940 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லய்யா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் .
1957 , 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
1986 ம் ஆண்டில்கொல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியகுழுவிற்குத் சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வந்தார். 1995 ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1997 ல் திருச்சி பெரியார் கல்லூரி ஆண்டு விழாவில் பேசும்போது, சிறந்த தமிழர்களாக, சிறந்த தேச பக்தர்களாக மாணவர்கள் திகழவேண்டும். தீண்டாமைக் கொடுமை, சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
1984 ல் சங்கரய்யா தலைமையில் சோவியத் நாட்டிற்கும், மக்கள் சீனாவிற்கும் சென்ற தூதுக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், சிரியாவுக்கு விவசாயிகள் சங்கம் சார்பாகவும் தூதுக்குழு சென்று வந்தது.
2000 ம் ஆண்டு குமரியில் நடந்த அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து பொண்டு பேசும்போது, வள்ளுவர் கூறியது போல கல்லாமை, இல்லாமை, அறியாமை, அறவே ஒழித்திட, ஏற்றத்தாழ்வு போக்கிட வேண்டும். தமிழகத்தில் இப்போது என்ன பார்க்கிறோம். அதை மாற்ற வேண்டாமா? என வினவினார்.
மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி கவிதை நடையில் எழுதப்பட்ட கலைஞரின் தாய் நாவலுக்கு மகிழ்ச்சியுடன் முன்னுரை எழுதித் தந்தார்.
சென்னையில் கடந்த 2021ல் சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரொக்கப்பரிசு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. அந்த தொகையினை சங்கரய்யா, கொரோனா நிதியாக தமிழக அரசிடம் நன்கொடையாக வழங்கினார்.
இத்தனை மகத்தான மனிதருக்கு முனைவர் பட்டம் வழங்கமாட்டேன் என கவர்னர் ரவி மறுத்துவிட்டார். தற்போது தமிழக மக்கள் இதைத்தான் பெருங்குறையாக பேசுகிறார்கள். சங்கரய்யாவின் உடல் நல்லடக்கம் நாளை காலை அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. அரசு மரியாதை அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.சங்கரய்யா மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்களும் அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்தனர்.