பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேபோல், இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.