’கலக்கப் போவது யாரு’ புகழ் நடிகர் பாலா மலைகிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு பைக் வாங்கித் தருவது என பலரும் பாரட்டும் சேவைகளை செய்து வருகிறது. “இனி வரும் காலத்தில் பாலா செய்யும் நல்ல உதவிகளில் நிச்சயம் என் பங்கும் இருக்கும்” என சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவரை அழைத்துப் பாராட்டி இருந்தார். இப்படியான சூழ்நிலையில்தான் மருத்துவமனை கட்டி அங்கு ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சைக் கொடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது… “எனக்கு மருத்துவமனை கட்டி அதில் இலவசமாக ஏழைகளுக்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பது ஆசை. குறிப்பாக இதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்பதுதான் என் நோக்கம். நான் படிக்க வைக்கும் ஒரு பையன் தற்போது பொறியியல் படித்து வருகிறார். அவர் அடுத்த ஆண்டு படித்து முடித்ததும் அந்த ஆஸ்பத்திரிக்கான பிளான் போட்டு கட்டித் தருவதாக சொல்லி இருக்கிறார். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார். பாலாவின் இந்த ஆசை சீக்கிரம் நிறைவேற வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.