அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் கோவை மாநகர மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி சுமார் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோவை மாநகர மாவட்ட அமைப்பாளர் திருஞானசம்பந்தம், கோட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் நான்காயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்கள் பெரும் ஓய்வூதிய தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.