Skip to content
Home » திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

  • by Authour

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர்  கண்ணன்,  பொறியாளர்.  இவர் தொழில்  முதலீட்டுக்காக தன்னுடைய 28 பவுன் நகைகளை  கே.கே. நகரில் உள்ள  ஸ்ரீ எம்.எஸ். பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த  மார்ச் மாதம்  அடகு வைத்து ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் பெற்றார்.

இந்த நிலையில்  கடந்த சில நாட்களாக  அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்படும் ஒரு பெண் பொறியாளர்  கண்ணனை போனில் தொடர்பு கொண்டு, உங்கள் நகையை மீட்டுக்கொள்ளுங்கள்.  மூழ்க போகிறது என கூறி உள்ளார்.  அவர் பணத்தை புரட்டிக்கொண்டு வருகிறேன் என கூறி உள்ளார்.

அதை ஏற்காத பெண்,  தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனால்  நேற்று  முன் தினம் கண்ணன்,  கத்தோலிக் சிரியன் வங்கியில்  ரூ.11 லட்சம் கடனாக வாங்கிக்கொண்டு நகையை மீட்க காரில் சென்றார். காரில்

கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியரும் வந்தார்.

பைனான்ஸ்க்கு வந்ததும் அங்கிருந்த பெண்ணிடம்(கண்ணனிடம் போனில் பேசியவர்) பணத்தை கண்ணன் கொடுத்தார்.   பணத்தை எண்ணி வாங்கிக்கொண்ட அந்த பெண், பெரிய நகைகள் என்பதால் அதை  வேறு இடத்தில் லாக்கரில் வைத்து உள்ளோம்.  நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள்  அதற்குள் நான் நகையை எடுத்து வந்துவிடுவேன் என கூறி உள்ளார்.

அதன் பேரில் கண்ணன்,  அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஒருமணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைனான்ஸ் பூட்டப்பட்டு கிடந்தது.  அந்த பெண்ணையும் காணவில்லை. அவரது போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அந்த பெண்ணின் வீட்டு முகவரியை வாங்கி அங்கு சென்றனர். அவர்   பொன்மலைப்பட்டியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  தாயுடன் வசித்து வருகிறார். வீட்டில் விசாரித்தபோது அவர் இங்கு இல்லை என கூறி விட்டனர். அக்கம் பக்கம் விசாரித்தபோது அந்த பெண் கால் டாக்சியில் சென்றதாக தெரிவித்தனர்.

 

கால் டாக்சி டிரைவர் நம்பரை தேடிபிடித்து அவரை தொடர்பு கொண்டபோது அந்த பெண்ணை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு திரும்பிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார். எனவே அந்த பைனான்ஸ் பெண்  நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இது குறித்து கண்ணன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.  கே.கே. நகர்  உதவி கமிஷனரையும்  சந்தித்து புகார் செய்தார்.  ஆனாலும் இதுவரை   எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது.

அந்த பெண் குறித்து போலீசார் விசாரித்தபோது, அவரது பெயர்  சுதா என்றும், ஏற்கனவே இவர் பல இடங்களில் இது போல மோசடி செய்தவர் என்றும், ஏற்கனவே கடந்த   2வாரத்திற்கு முன் இதுபோல  திருச்சியில் ஒரு  பெண்ணிடம் நகையை மீட்டு தருவதாக கூறி ரூ.12 லட்சம் சுருட்டியவர். அது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் இருப்பதாகவும்  , இது குறித்து நாளிதழ்களில் செய்தி வந்துள்ளதும் தெரியவந்தது. சுதாவை பிடித்தால் இதுபோல திருச்சியில் எத்தனை பேரிடம் பணத்தை சுருட்டினார் என்பது தெரியவரும்.

சுதா , தன்னை ஒரு புரட்சிபெண் என்பது போல காட்டிக்கொள்ள பாரதியாரின் சிலை அருகே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது வாட்ஸ்அப்பில் வைத்து உள்ளார்.  சுதா தனி ஆளாக இதுபோன்று  செய்திருக்க வாய்ப்பில்லை. இவருடன் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *