பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 76வது பதிப்பு மே 27 தேதி வரை நடைபெறவுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா முதன் முதலில் 1946 இல் கலை துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் சென்றுள்ள இஷானு திரைப்படக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு சுந்தர் பங்கேற்றுள்ளார். முன்னதாக, இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.தற்பொழுது, நடிகை குஷ்பு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை அணிந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, கையால் நெய்யப்பட்ட ஒவ்வொரு சேலையும், நம் நெசவாளர்களுக்கு கலையை உயிர்ப்பிக்க உதவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.