நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9,ம் வகுப்பு முதல் 12, ம் வரை மாதம் 1000 ரூபாய் வீதம் என 4 ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் இடைநிற்றலின்றி கல்வியை தொடர அரசு பள்ளி மாணவர்களுக்கு
தமிழக பள்ளி கல்வித்துறை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 2022– 2023 ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு இன்று தமிழக முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவரும் 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 8,ம் வகுப்பு பயிலும் சுமார் 2680 மாணவர்கள் இன்று 12 மையங்களில் இந்தத் தேர்வை எழுதினர். நாகையில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வினை மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் பார்வையிட்டார். இந்த தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகள், அரசு தேர்வு மாதிரியான விடைத்தாள்களில் உள்ள கட்டங்களை நுணுக்கமாக பூர்த்தி செய்தனர்.