தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவிலும் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 278 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 புதிய பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 759 ஊரக குடியிருப்புகளுக்கு 182 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்; திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தைச் சார்ந்த நல்லாத்தூர், என்.என். கண்டிகை மற்றும் பூனிமாங்காடு ஊராட்சிகளில் உள்ள நல்லாத்தூர் மற்றும் 15 குடியிருப்புகளுக்கு 4 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 134 ஊரக குடியிருப்புகளுக்கு 91 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டம்;
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரக குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர் மற்றும் வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2 குடியிருப்புகளுக்கு 117 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரக குடியிருப்புகளுக்கு 440 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டம்; ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 442 ஊரக குடியிருப்புகளுக்கு 412 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்; ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 144 ஊரக குடியிருப்புகளுக்கு 87 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிப்பத்து ஊராட்சியில் உள்ள 4 ஊரக குடியிருப்புகளுக்கு 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம்; என மொத்தம் 1,335 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 9.15 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அலுவலக உதவியாளர், களப்பணியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கும்; நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 68 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் / வருவாய் உதவியாளர், அலுவலக உதவியாளர், பணி ஆய்வர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு ஈவுத்தொகை வழங்குதல்
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 18 கோடியே 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.