தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டது. இந்நிலையில் கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர், ‘சென்னையில் பார்முலா – 4 கார் பந்தயம், வரும் 31, 1 ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்தப் பந்தயத்துக்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ‘ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு போக்குவரத்து மாற்றம் உறுதி செய்யப்படும்’ என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ” பொதுமக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது. பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து சீராக இருக்க வேண்டும். மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. கார் பந்தயம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டனர். மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ‘எப்.ஐ.ஏ’ அனுமதியளிக்கும் பட்சத்தில் கார் பந்தயம் நடத்த தடையில்லை என உத்தரவி்ட்டது.