தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டங்கள்) எஸ். ஈஸ்வர், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர், இளஞ்செழியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் உளுந்து மற்றும் சோயா விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒக்கக்குடி கிராமத்தில் இவ்வாறு மானியத்தில் பெறப்பட்டு விதைப்பு செய்யப்பட்டுள்ள சோயா மற்றும் உளுந்து வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கலைஞர் திட்ட கிராமமான காருக்குடியில் ஒரு விவசாயிக்கு இரண்டு இலவச தென்னங் கன்றுகள் வீதம் வழங்கி, வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர் பேசும் போது, நெல்லுக்கு பின் அனைத்து விவசாயிகளும் உளுந்து சாகுபடியினை மேற்கொள்ள வசதியாக முன் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து பரப்பிற்கும் 50 சத மானிய விலையில் உளுந்து விதைகள் விநியோகம் செய்யப்பட, அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து விதைகள்
அதிக அளவில் இருப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு உளுந்து விதைப்பு செய்து, வளம் குறைந்துள்ள மண்ணை வளமாக்கி, குறுகிய காலத்தில் ஒரு நிறைந்த மகசூல் பெற்றிட வேண்டும். மேலும் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவு கொள்முதல் விலையாக கிலோ ஒன்றிற்கு ரூபாய் 65 வீதம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு சாதகமானதாகும். எனவே, அனைத்து விவசாயிகளும் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றார். ஆய்விற்கான ஏற்பாடுகளை திருவையாறு வேளாண் அலுவலர் சினேகா, காருக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை உதவி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.