கரூர் மாவட்டம், குளித்தலை ஆய்வு மாளிகையில் குளித்தலை வட்டார வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 32 மானிய விலையிலான பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் விவசாயத்தையும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர், களை இயந்திரங்கள், டிராக்டர் உள்ளிட்ட
வேளாண் இயந்திரங்களை வழங்கி வருவதாகவும், தற்போது இந்த பவர் ட்ரில்லருக்கான மானிய தொகையினை 85000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கியதன் மூலம் 2.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரத்தினை 1.30 லட்சம் பணம் செலுத்தினால் மட்டும் போதும், தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கான பல திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்க்கை உயர்த்துவதற்காக செயல்பட்டு வருகிறார் அவருக்கு துணையாக நிற்போம் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட இயக்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் பொது மக்களிடையே சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.