திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளர் சண்முகசுந்தரம் மர்ம நபர்களால் இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
லால்குடி அருகே பி.கே.அகரம் கிராமத்தை சேர்ந்தர் சண்முக சுந்தரம் (60). இவர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளராக பதவி வைத்து வருகிறார்.இவர் தற்போது எம்.ஆர். பாளையம் கிழக்கு காலணி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவருக்கு இவரது உறவினர் வீட்டில் இருந்து தினமும் உணவு வந்து கொடுத்து வந்துள்ளனர் .நேற்றிரவு உணவு கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் சண்முகசுந்தரத்தை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இன்று காலை வழக்கம் போல் உணவு கொடுக்க வந்தபோது சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் சிறுகனூர் போலீசார் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீட்டைச் சுற்றி குறைத்தபடி வந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.