Skip to content

கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நுண்ணறிவு பிரிவு போதை பொருட்களை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம்தேதி தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்த தீபக்(31), பாலிமேத்தா(27) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், கடந்த 20ம் தேதி அதேபோல் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அரும்பாக்கம் நடுவாங்கரை பாலம் பகுதியில் மெத்தபெட்டாமைன் விற்பனை செய்த அருண்குமார்(28), சித்தார்த்(28), தீபக்ராஜ்(25) அகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி நைஜீரியா நாட்டை சேர்ந்த கபீர் குளோன்ஸ்(32), சந்தோஷ்(27), ஆண்டனி ரூபன்(29) ஆகியோரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர்.

பிறகு போதை பொருட்களை ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து கொடுக்கும் முக்கிய குற்றவாளியான ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் (47) என்பவரை தனிப்படை போலீசார் ஏஜென்டுகள் போல் பேசிய போதை பொருள் வேண்டும் என்று கூறி வரவழைத்து மாதவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து கொகைன் என்ற பயங்கர போதை பொருளை நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் தனிப்படைக்கு உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண்(40) என்பவர் தனது நண்பரான மெகலன்(42) என்பவருடன் இணைந்து சென்னை முழுவதும் தனது ஆட்களை நியமித்து கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தனது தந்தை டிஜிபி என்பதால் அருண் வெளிநாட்டு போதை பொருள் கும்பலுடன் நேரடியாக தொடர்பு வைத்துகொண்டு தடையின்றி கொகைன் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் முன்னாள் டிஜிபி மகன் அருண், அவரது நண்பர் மெகலன், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி(39) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3.8 கிராம் கொகைன், ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணம் 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரவிந்திரநாத்தின் மகன் அருண், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். அங்கு பணியாற்றும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தது போதும் என்று கூறி இந்தியாவுக்கு அழைத்து வந்து விட்டார். சென்னையில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வந்த பின்னரும் போதைப் பொருளை அருண் பயன்படுத்தி வந்தார். தற்போது போலீஸ் வலையில் சிக்கிவிட்டார். சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!