கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த ஜெகதிஷ் ஷேட்டர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த 2008-13-ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றது. முதல் 3½ ஆண்டுகள் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகினார். எனவே சதானந்தகவுடா முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். அவர் 11 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
எடியூரப்பாவின் ஆதரவில் அவர் முதல்-மந்திரி பதவியை அடைந்தார். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் காங்கிரசில் சேருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் உப்பள்ளியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்த அவர் நேற்று இரவு பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று (திங்கட்கிழமை) ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.