கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை செய்தனர். இதனாலவ் நலம்பெற்ற யானை வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
அந்த யானையின் அருகே இருந்த குட்டி யானை திடீரென காணாமல் போனதால் நான்கு குழு அமைத்து வனத்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர் இந்நிலையில் நேற்று காலை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பச்சாம்பதி என்ற பகுதியில் குட்டியானையை கண்டுபிடித்து மருதமலை வனப் பகுதியில் உள்ள யானை மடுவு என்ற பகுதிக்கு கொண்டுவந்தனர்.
குட்டி யானையின் தாய் யானை அதே பகுதியில் முகாமிட்டு இருப்பதால் தொடர்ந்து இரண்டு யானைகளையும் ஒன்று சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் நான்கு மாத குட்டி யானை என்பதால் வனத்துறையினர் அதற்கு புட்டிப் பால் கொடுத்து வருகின்றனர். பினனர் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வைத்து குட்டி யானையை கண்காணித்து வந்தனர்.
அதேபோல கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானை தற்போது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் இரண்டையும் இணைப்பதற்காக குட்டியானையை, யானை மடுவு என்ற இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர் .தற்போது தாய் யானை அப்பகுதிக்கு வந்து தொடர்ந்து குட்டியை தேடி மோப்பம் செய்து வருகிறது. குட்டி யானை இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் தான் தாய் யானை உள்ளதால் விரைவில் குட்டியை கண்டுபிடித்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று விடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து காத்திருக்கிறார்கள்.