ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு, பேக்கிங், உணவு தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் சமீபத்திய தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்டுபிடிப்புகளைக் காணும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கண்காட்சியில் HoReCa எக்ஸ்போவின் 9வது பதிப்பு (ஹோட்டல், ரெஸ்டாரன்ட், கேட்டரிங் & கஃபே), பேக்கர்ஸ் டெக்னாலஜி ஃபேரின் 15வது பதிப்பு , ஃபுட் & டிரிங்க் ப்ராசசிங் எக்ஸ்போவின் 3வது பதிப்பு,
டெய்ரி பிராசசிங் எக்ஸ்போவின் 2வது பதிப்பு மற்றும் இந்தியா ஃபுட் பேக் எக்ஸ்போவின் 3வது பதிப்பு ஆகியவற்றின் கண்காட்சியானது கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. முந்தைய பதிப்புகள் தெலுங்கானாவில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் நடைபெறவுள்ளது. மாதம்பட்டி குழும நிறுவனங்களின் தலைவர் டி.பி.ரங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
கண்காட்சி குறித்து சினெர்ஜி எக்ஸ்போசர்ஸ் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் மற்றும் துணைத் தலைவர் சசி குமார்ஆகியோர் கூறுகையில், இந்த நிகழ்வுகளில் இந்தியா முழுவதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று குறிப்பிட்டனர். நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்திய பிராண்டுகளுடன், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள், மேலும் புதிய தயாரிப்புக்களின் வெளியீடுகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வை மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MSME), அகில இந்திய உணவு பதப்படுத்துபவர்கள் சங்கம் (AIFPA), தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் (NIFTEM-T), சொசைட்டி, இந்திய பேக்கர்ஸ் (SIB), தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA), இந்திய உணவு சேவை ஆலோசகர்கள் சங்கம் (FSCAI), தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கம் (SICA), மற்றும் தமிழ்நாடு உணவு வழங்குபவர்கள் சங்கம் ஆகியவை ஆதரிக்கின்றன .இக்கண்காட்சியை தமிழ்நாடு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூலை 3ம் தேதி தொடங்கி வைக்கிறார்.