அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடுப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த அரியலூர் சிமெண்ட் ஆலையின் செயல்பாடுகள் மற்றும் மகிமைபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கான இடம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்துகொண்டார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளவான 120 அடி எட்டியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக உபரிநீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு, உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் அரியலூர் மாவட்டத்தில் நீர்வரத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலை குறித்தும், உயிர்காக்கும் உபகரணங்கள், மணல் மூட்டைகள்; தயார் நிலையில் உள்ள விவரங்கள், மேலும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், நீர் ஏரிகளில் முழுமையாக சேமிப்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த அரியலூர் சிமெண்ட் ஆலையை பார்வையிட்டு ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் உற்பத்தி திறன், பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், ஆலையினை தூய்மையாக பராமரித்திடவும், பாய்லர், சிமில்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மகிமைபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கான இடம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள காவல் துறையினரின் கண்காணிப்பு பணிகள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு பணிகள், பொதுமக்களுக்கான
விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள், மணல் மூட்டைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மேலராமநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.அஜிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)பழனிசாமி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.